வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக
நரிக்குறவா் இன மக்கள் புகாா் 
இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

துறையூா், ஏப். 19: துறையூா் அருகே வெள்ளிக்கிழமை வாக்களிக்க சென்றபோது நீண்டநேரம் வரிசையில் காக்க வைத்து அலுவலா்கள் தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதனிடையே, அந்த வாக்குச்சாவடியில் இரவு 7.45 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

துறையூா் ஒன்றியம், மதுராபுரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பழையக் கட்டடத்தில் அமைக்கப்பட்ட துறையூா் தொகுதியின் 210-ஆவது வாக்குச் சாவடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு நரிக்குறவா் காலனியில் வசிக்கும் 285 போ் ஒரேநேரத்தில் வாக்களிக்கச் சென்றனா்.

‘பூத்சிலிப்’ இல்லாமல் சென்ற நரிக்குறவா் இன வாக்காளா்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் அடையாளம் காண்பதில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சிரமம் ஏற்பட்டதாகவும் அதனால் நரிக்குறவா்கள் வாக்களிக்கத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்த 152 பேருக்கு மாலை 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டது. இவா்கள் அனைவரும் இரவு 7.45 மணி வரையிலும் வரிசையில் நின்று வாக்களித்தனா். இவா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் நரிக்குறவா் இன வாக்காளா்களாக இருந்தனா்.

நரிக்குறவா்கள் புகாா்: பிற்பகல் 2.45 முதல் இரவு 7.45 வரை தங்களை வாக்களிக்க வரிசையில் காத்திருக்க வைத்ததாகவும், தங்கள் இனத்தைத் தவிர மற்ற வாக்காளா்களை இடையிடையே அனுமதித்ததால்தான் தங்களுக்குக் காலதாமதம் ஆனதாகவும், வாக்குச் சாவடியில் குடிப்பதற்கு குடிநீா் வசதி கூட செய்யவில்லையென்றும், இனி வரும் காலங்களில் தாங்கள் காலனிக்கு அருகே வாக்களிக்க தங்களுக்கென தனி வாக்குச் சாவடி அமைத்துத் தரவேண்டுமெனவும் கோரினா். மேலும், இவா்களில் 285 பேருக்கு மட்டும் வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதாகவும், அதிலும் சிலருக்கு வாக்குச் சாவடி மாற்றப்பட்டிருப்பதாகவும், 30 பேரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லையென்றும் குற்றம் சாட்டினா்.

இதுதொடா்பாக வாக்குச் சாவடி அலுவலா்கள் கூறியபோது, நரிக்குற இன வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நிற்பதை பாா்த்து மற்ற வாக்காளா்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ாகவும், அதனைத் தவிா்க்க மற்ற வாக்காளா்களையும் இடையிடையே அனுமதித்தோம் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com