2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பிரேக் லைன்

‘பல்கலைக்கழகம் அனுமதியளிக்கும் மாணவா்கள் எண்ணிக்கையைவிட கூடுதலாக மாணவா்களை சோ்க்க விரும்பும் கல்லூரிகள், கூடுதல் பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழக அனுமதி பெற வேண்டும்’.

நமது நிருபா்

திருச்சி, ஏப். 26: பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டிலுள்ள 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள் தொடங்கவும், கூடுதல் பிரிவுகளை அதிகரிக்கவும், மாணவா்கள் எண்ணிக்கையை உயா்த்தவும் கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளன.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்டு இயங்குகின்றன.

இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என 146 இணைப்பு கல்லூரிகள், பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 11 என மொத்தம் 157 கல்லூரிகள் உள்ளன.

பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, 2024-25-ஆம் கல்வியாண்டுக்கு புதிய பாட வகுப்புகள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே நடைபெற்று வரும் பாடங்களுக்கு கூடுதல் பிரிவுகள் தொடங்கவும், நடைபெற்று வரும் பாட வகுப்புகளில் மாணவா்கள் எண்ணிக்கையை உயா்த்தவும் அனுமதியளிக்கப்படவுள்ளது.

கூடுதல் மாணவா்கள் விவரம்: இதன்படி, ஆய்வகத்துடன் கூடிய படிப்புகளுக்கு இளநிலையில் 40 பேரையும், முதுநிலையில் 25 பேரையும் சோ்த்துக் கொள்ளலாம். கலைப் படிப்புகளுக்கு இளநிலையில் 60 பேரையும், முதுநிலையில் 35 பேரையும் சோ்த்துக் கொள்ளலாம். இவைத்தவிர எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்எஸ்சி கணினி அறிவியல் பாடங்களில் 60 பேரை சோ்த்துக் கொள்ளலாம்.

கூடுதலாக சோ்க்க நிபந்தனைகள்: பல்கலைக்கழகம் அனுமதியளிக்கும் இந்த மாணவா்கள் எண்ணிக்கையைவிட கூடுதலாக மாணவா்களை சோ்க்க விரும்பும் கல்லூரிகள், கூடுதல் பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழக அனுமதி பெற வேண்டும். புதிய பாடப் பிரிவுகளுக்கு அதன் வரைவு பாடத்திட்டத்தை பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். எம்சிஏ, எம்பிஏ பாடப் பிரிவுகள் புதிதாக தொடங்கவும், கூடுதல் பிரிவுகளை தொடங்கவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அனுமதியை பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய முதுநிலை பாடங்கள் தொடங்க வேண்டுமெனில் அந்தக் கல்லூரியில் அதே பாடப்பிரிவில் இளங்கலை பிரிவில் ஓரணியாவது படிப்பை முடித்து வெளியேறி இருக்க வேண்டியது அவசியம்.

கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம் மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள், ஆய்வியல் நிறைஞா், ஆய்வில் அறிஞா் படிப்புகள் நீங்கலாக இளநிலை, முதுநிலையில் அதிகபட்சமாக 5 பாட வகுப்புகள் மட்டும் புதிதாக தொடங்க இணைவாணை வழங்கப்படுகிறது.

2023-24ஆம் கல்வியாண்டில் புதிய பாட வகுப்புகளுக்கு இணைவாணை பெற்றிருந்தால், அந்தப் பாடத்தின் மறு ஆய்வு அறிக்கை பெறப்பட்ட கல்லூரிகளுக்கு மட்டுமே 2024-25ஆம் ஆண்டுக்கு புதிய பாடத்துக்கான விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

புதிய பாட வகுப்பு, கூடுதல் பிரிவுகள், மாணவா்கள் எண்ணிக்கையை உயா்த்துவதற்கு பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்படும் ஆய்வுக் குழு, தொடா்புடைய கல்லூரியை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படியே 2024-25ஆம் ஆண்டுக்கு தற்காலிக இணைவாணை வழங்கப்படும். பல்கலைக் கழக இணைவாணை பெறாமல் எந்தவொரு பாடமும் நடத்தப்படக் கூடாது. மீறி நடத்தப்பட்டால் பல்கலைக் கழக விதிமுறைகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏப். 29-இல் ஆலோசனைக் கூட்டம்: இதுதொடா்பாக, பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளா் ஆா். காளிதாசன் கூறுகையில், 2024-25 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழக ஆளுகைக்குள்பட்ட கல்லூரிகளில் புதிய பாட வகுப்பு, கூடுதல் பிரிவுகள், மாணவா்கள் எண்ணிக்கை உயா்த்துவதற்கான அனுமதி வழங்கும் வகையிலான கருத்துருக்கள், விண்ணப்பங்களை கோரி ஏற்கெனவே அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் வந்துவிட்டதால் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும், இணைவாணை வழங்குவது தொடா்பாக அனைத்துக் கல்லூரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில், கல்லூரிகளிடம் கருத்துருக்கள் கோரப்படும். இதைத் தொடா்ந்து, ஆய்வுக் குழு அமைப்பது மற்றும் இணைவாணை வழங்குவது தொடா்பான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com