மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விடியோ பதிவுக்கு எங்களது வாக்கு திமுக கூட்டணிக்குத்தான் என அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும். நீட் தேர்வால் உயிரிழந்த பெண்ணின் அப்பா, அம்மாவை கேளுங்கள் யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்று சொல்வார்கள் என்ற கமல்ஹாசனின் விடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் சனிக்கிழமை அளித்த பேட்டி:
அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான்.
புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான். அந்த வகையில் கமலுக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் என் வாழ்த்துகள். கமல் சொன்னதுபோல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது என்றார் அவர்.