அரியலூரில் குடிநீர், வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

அரியலூர் ஆட்சியரகத்தில் குடிநீர் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் ஆட்சியரகத்தில் குடிநீர் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.  தெரிவித்தது:
அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக ரூ.15.66 கோடியில் 704 நீர்  ஆதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் குடிநீர்  தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டது. 
இதன், முதற்கட்டமாக 106 புதிய ஆழ்குழாய் கிணறுகளும்,  புதிய பைப்லைன் மூலம் குடிநீர் வழங்க 27 பணிகளும், 280 ஆழ்குழாய் கிணறு பழுதுநீக்கம் செய்தும், 60  ஆழ்குழாய் கிணறு ஆழப்படுத்துதல் பணிகளும், 127 மோட்டார் திறன் அதிகப்படுத்துதல் பணிகளும்  என மொத்தம்  600 பணிகள் முடிந்துள்ளன.  
இரண்டாம் கட்டமாக 72 ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளும்,  புதிய பைப் லைன் மூலம் குடிநீர் வழங்க 20 பணிகளும், 12 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கான பணிகளும்  என மொத்தம் 104 பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். 
மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநருமான எ. சரவணவேல்ராஜ், ஆட்சியர் மு. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கா. பெற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன்,  கோட்டாட்சியர்கள் அரியலூர் நா. சத்தியநாராயணன், உடையார்பாளையம் ஜோதி மற்றும் வட்டாட்சியர்கள்,  நகராட்சி அலுவலர்கள்,அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் எ. சரவணவேல்ராஜ், அரியலூர் நகராட்சி கீரைக்காரத் தெரு, புதிய தெருவில் நடைபெற்று வரும் கிணறு அமைக்கும் பணிகள், திருமானூர் ஒன்றியம் சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை கிராமத்தில் கட்டப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகளைப் பார்வையிட்டார். 
தொடர்ந்து அவர், உடையார்பாளையம் பேரூராட்சி சித்தேரிக்கரையில் கட்டப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், ஜயங்கொண்டம் நகராட்சி மலங்கள் குடியிருப்பு, பாப்பங்குளம் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு  அமைக்கும் பணிகள், செந்துறை ஒன்றியம், நெய்வனம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான  பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமமின்றி குடிநீர் வழங்க, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com