முகிலனை மீட்கக்கோரி நூதனப் போராட்டம்

சூழலியல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தருமாறு அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே செல்பேசி கோபுரத்தில் ஏறி விவசாய சங்கப் பிரதிநிதிகள்


சூழலியல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தருமாறு அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே செல்பேசி கோபுரத்தில் ஏறி விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சூழலியல் போராளி முகிலனை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். வேதாரண்யம்  அருகே கரியப்பட்டினம் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி, சுக்கிரன் ஏரி, கண்டராதித்தம் பெரியஏரி,  வெங்கனூர் ஆண்டி ஓடை ஏரி ஆகியவற்றை தூர்வார வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  மூட்டைக்கு ரூ.30 முதல் 40 வரை வசூல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சேவை இயக்கத்  தலைவர் தங்க. சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மூ. மணியன் ஆகிய இருவர் ஞாயிற்றுக்கிழமை திருமானூர் அடுத்த வெங்கனூர் கிராமத்தில் உள்ள செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெங்கனூர் போலீஸார் மற்றும் அரியலூர் வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறினர். அப்போது, தங்க சண்முக சுந்தரத்துக்கு மயக்கம் ஏற்பட்டதால், காவல் துறை அதிகாரி ஒருவர் தண்ணீருடன் மேலே சென்று அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து அவர்களை மீட்டு கீழே அழைத்து வந்தார். இதனையடுதது அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வெங்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com