கைது செய்வதில் பாரபட்சம்; பொன்பரப்பியில் சாலை மறியல்
By DIN | Published On : 21st April 2019 12:56 AM | Last Updated : 21st April 2019 12:56 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பியில் மக்களவைத் தேர்தல் அன்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஒரு தரப்பினரை மட்டுமே கைது செய்வதாகக் கூறி மாற்றுச் சமூக பெண்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் மக்களவைத் தேர்தல் அன்று ஒரு பிரிவினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சாலையில் போட்டு உடைத்ததால் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 8 பேர் காயமடைந்தனர். காலனித் தெருவில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள், 1 இருசக்கர வாகனம் சேதமடைந்தது.
இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் மட்டுமே 12 பேரை போலீஸார் கைது செய்தனராம்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கூறி பொன்பரப்பி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு சமூகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் செந்துறை - ஜயங்கொண்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.