அரியலூரில் இடைவிடாத மழை; ஏரிக் கரை, வீடு சேதம்

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை சாரல் காற்றுடன் பெய்த மழையில் பட்டுநூல்காரர் ஏரிக் கரை  உடைந்தது; செந்துறை அருகே ஒரு வீடும் சேதமடைந்தது.


அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை சாரல் காற்றுடன் பெய்த மழையில் பட்டுநூல்காரர் ஏரிக் கரை  உடைந்தது; செந்துறை அருகே ஒரு வீடும் சேதமடைந்தது.
அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், மாலையில் சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சனிக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால் அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலை, திருச்சி சாலை, செந்துறை ரவுண்டானா, ராஜாஜி நகர் மின்வாரிய அலுவலகப் பகுதி, உழவர் சந்தை, மார்கெட், கல்லங்குறிச்சி சாலை, புது மார்க்கெட் தெரு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலைகளில் சுமார் 2 அடி உயரத்துக்குத் தேங்கியது. இதேபோல ஜயங்கொண்டம்,செந்துறை,திருமானூர், தா.பழூர், மீன்சுருட்டி,ஆண்டிமடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலைகளில் ஓடியது. திருச்சி-சிதம்பரம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்-பெரம்பலூர் சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து செல்ல ஆக்கிரமிப்புதான் காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால்தான் மழை நீர் சாலைக்கு வந்து விடுகிறது.
மேலும் சில இடங்களில் கழிவு நீர்வாய்க்கால்கள் குறுகியதாக இருப்பதாலும் மழைக் காலங்களில் சாலையில் கழிவு நீர் வெள்ளம்போல ஓடுவது வாடிக்கையாகி விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும். இல்லையெனில் தொடர்மழை வந்தால் அரியலூர் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பட்டுநூல்காரர் ஏரிக் கடை உடைப்பு: அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த  மழையில் அரியலூர் ரயில்வே கேட் அருகேயுள்ள பட்டுநூல்காரர் ஏரிக் கரை உடைந்து, அருகிலுள்ள குடியிருப்பு  பகுதிகளில் சூழ்ந்தது.  செந்துறை அருகே வீடு சேதம்: மாவட்டத்தில் பெய்த மழையில்,செந்துறை அருகே உஞ்சினி கிராமம்,காலனித் தெருவில் வசிக்கும் கணேசன் மனைவி இந்திராகாந்தியின் வீட்டு முன்பக்கச் சுவர் இடிந்து வெளியே விழுந்தது. இதனால் உயிர்ச் சேதமில்லை. கிராம நிர்வாக அலுவலர் வீட்டை பார்வையிட்டுச் சென்றார். 
அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை நிலவரப்படி அதிகப்படியாக அரியலூரில் 123 மில்லி மீட்டர் மழை பதிவானது. செந்துறையில் 70.2 மி.மீ, ஜயங்கொண்டத்தில் 45 மி.மீ, திருமானூரில் 42 மி.மீ மழை பதிவாகியது. ஆக மொத்தம் 280 மில்லி மீட்டரும், சராசரியாக 70.175 மில்லி மீட்டரும் மாவட்டத்தில் மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com