கொள்ளிடம் ஆற்றில்மாட்டுவண்டியில் மணல் அள்ள குவாரி தேவை
By DIN | Published On : 29th January 2019 04:35 AM | Last Updated : 29th January 2019 04:35 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளும் வகையில் குவாரி அமைக்க வேண்டும் என மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 390 மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மனு: திருமானூர் அருகிலுள்ள சுள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றையொட்டி அமைந்திருக்கிறது. எங்கள் பகுதியில் முன்பு மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்காக மணல் குவாரி இயங்கி வந்தது. இதனால் 60 தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வந்தோம்.
தற்போது மாட்டு வண்டி மணல் குவாரி இல்லாததால், எங்கள் குடும்பத்தினர் வறுமையில்வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருதி, கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்காக மணல் குவாரியை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.