காரைக்குறிச்சி பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள காரைக்குறிச்சி  அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீசுவரர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள காரைக்குறிச்சி  அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் இருமுறை சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். சூரியன் இக்கோயிலில் வழிபட்டதால் சூரிய பரிகாரத் திருக்கோயிலாகவும் விளங்கி வருகிறது.
இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தி 50 ஆண்டுகளுக்கு மேல் நிறைவடைந்துவிட்டதால், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் இணைந்து குடமுழுக்கை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இத்திருப்பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்தவுடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.
 தொடர்ந்து சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பில்  தேவாரத் திருப்பதிகங்கள் பாடி, தமிழ் மந்திரங்கள் முழங்க கயிலை வாத்திய இசையுடன் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவாயநம நமசிவாய என்று பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர், உலகளாவிய ஆன்மீக சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com