அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுமா?

அரியலூரில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமலும், ஆபத்தான கட்டடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றம் ஒருபுறம். இடம்


அரியலூரில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமலும், ஆபத்தான கட்டடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றம் ஒருபுறம். இடம் தேர்வு செய்யப்பட்டு கிடப்பில்போடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் வழக்குரைஞர்கள் பொதுமக்கள் உள்ளனர். 
அரியலூர் கடந்த 2007-இல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஒன்றரை ஏக்கரில் முன்சீப் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்துக்கு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, கடந்த 2011-இல் அரியலூர் நீதிமன்றத்தை மாவட்ட நீதிமன்றமாக தரம் உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, அதே வளாகத்திலேயே மாவட்ட நீதிமன்றமும் தொடங்கப்பட்டது. 
இதையடுத்து,  முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்றம், உதவி அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுதவிர,  குடும்ப நல நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டு, அவை அரியலூர் நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
தற்போதுள்ள அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குரைஞர்கள், பொதுமக்கள் அமர்வதற்கு இடம் இல்லாமல்  உள்ளது. குடிநீர், வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
தற்போதைய நீதிமன்ற வளாகம், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதால், மழைநீர் கசிந்து வழக்கு  ஆவணங்களை நனைத்து பாழ்படுத்திவிடுகிறது. மேலும், எலித்தொல்லையால் ஆவணங்கள் சேதமாகின்றன. தற்போது கட்டடத்தின் மேலே மரங்கள் முளைத்து கட்டடத்தை சேதப்படுத்தி வருகின்றன. 
இந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் புறவழிச்சாலை அருகே அம்மாகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை உயர்நீதிமன்றக் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்து பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை ஏதும் இல்லை. இடத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைவிட கூடுதலாக இந்து சமய அறநிலையத் துறை கேட்பதால், இப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அரியலூரில் தற்போது இயங்கி வரும் நீதிமன்றத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பழைய கட்டடம் என்பதால் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஓடுகள் உடைந்து விழுவதால் நீதிமன்றத்தின் உள்ளே அமர்ந்து பணிபுரிய அச்சமாக உள்ளது. 
தமிழக அரசு இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என வழக்குரைஞர்கள், பொதுமக்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.   
கடந்த வியாழக்கிழமை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையின் போது, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com