குறுவை நாற்றங்கால் தயாரிப்பில் அதிக மகசூல் பெறும் வழிகள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் தற்போது நடைபெற்று வரும் குறுவை நாற்றங்கால் தயாரிப்பு பணியில் அதிக மகசூல்


அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் தற்போது நடைபெற்று வரும் குறுவை நாற்றங்கால் தயாரிப்பு பணியில் அதிக மகசூல் அடைவதற்கான வழிகளை திருமானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் லதா தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
         வழக்கமான முறையில் ஒரு  ஏக்கர் நடவு செய்ய 8 சென்ட் நாற்றாங்கால் போதுமானது. நாற்றாங்கால் அமைக்கும் பகுதி நீர்வளம் நிறைந்ததாகவும் மற்றும் வடிகால் அமைப்பு உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும். ஒரு சென்ட்க்கு 2 கிலோ வீதம் டி.ஏ.பி அடி உரமாக தெளிக்க வேண்டும். தேவையான அளவு இடைவெளியில் பாத்திகள் அமைத்து முளைகட்டிய விதைகளை பாத்தியின் மேல் சீராக விதைக்க வேண்டும். 
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸை 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, நீரை வடிகட்டி 24 மணி நேரத்திற்கு முளைகட்டி பின்னர் விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்க் காரணிகளை ஆரம்பத்திலேயே அழிக்கலாம். விதைத்த 3 முதல் 5 நாள்கள் வரை மண்ணை முழுவதுமாக ஈரமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். 20 - 25 நாள்களில் நாற்றுகள் நடுவதற்கு தயாராகிவிடும் நிலையில் நாற்றுக்களைப் பறிப்பதற்கு ஒரு நாள் முன்பு 8 கிலோ ஜிப்சத்தை நாற்றாங்காலில் இடுவதினால் நாற்றுகளை எளிதில் பறிக்கலாம். 
நடவு செய்யும் முன்னர் ஒரு ஏக்கருக்கான நாற்றுகளை 2 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 2 பொட்டலம் பாஸ்போக்டீரியா மற்றும் 400 கிராம் சூடோமோனஸ் முதலியவற்றை 50 லிட்டர் கரைசலில் வேர் பகுதி நனையுமாறு 10 நிமிடங்கள் நனைத்தும் அல்லது நாற்றுக்களைப் பறிப்பற்கு முதல் நாள் நாற்றங்காலில் இட்டும், பிறகு நாற்றுகளைப் பறித்தும் நடவு செய்யலாம். 
இலைப்பேன்கள் இருப்பின் விசைத்தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தலாம். நாற்றுகளை நடுவதற்கு முன் இலை நுனிகளைக் கிள்ளுவதால் குருத்துப்பூச்சி முட்டைகளை அழிப்பதன் மூலம் நடவு வயலில் குருத்துப் பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com