செந்துறை அருகே ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 24th June 2019 09:33 AM | Last Updated : 24th June 2019 09:33 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
செந்துறை அருகேயுள்ள இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன்(54). இவர், திருக்கோணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சாந்தி(43) இடையக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்ற இருவரும் அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு வீடுதிரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகன் அளித்த புகாரின் பேரில் குவாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.