அரியலூரில் 143 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
By DIN | Published On : 24th March 2019 03:15 AM | Last Updated : 24th March 2019 03:15 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்த 143 பேர் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும்
அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்போர் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கவும், தேர்தல் விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டபின்பு அவற்றை பெற்றுக்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால், திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அதற்கான ஆதாரத்துடன் மண்டப உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
அதேபோல், தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் முதல் 2 தினங்களிலிருந்து வாக்குப்பதிவு முடியும் வரை வெளியாட்கள் யாரையும் தங்க வைக்க அனுமதிக்கக் கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.