144 தடை உத்தரவு அமல்: அரியலூா் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; பேருந்து நிலையம் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, அரியலூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை
ari24bus1_2403chn_11_4
ari24bus1_2403chn_11_4

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, அரியலூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாா்ச் 24 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அலைமோதிய கூட்டம்: இந்த உத்தரவையடுத்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெரும் பரபரப்பு காணப்பட்டது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க கூட்டம் அலைமோதியது.

ஏடிஎம் மையங்கள்: மாவட்டத்திலுள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் சென்றனா். இதேபோல் வங்கிகளிலும் வாடிக்கையாளா்கள் காத்திருந்து பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டனா்.

தடை உத்தரவு அமல்: செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியில் இருந்தே போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அத்தியவாசியப் பொருள்கள் விற்பனை கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூடுமாறு உத்தரவிட்டனா். இதையடுத்து மாலை 6 மணியளவில் அரியலூா் கடைவீதியிலுள்ள வணிக வளாகங்கள், நகைக் கடைகள், துணிக் கடைகள், பெரிய ஹோட்டல்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

பேருந்து, ஆட்டோக்கள் நிறுத்தம்: பிற்பகலில் இருந்தே வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதேபோல், அரியலூரில் இருந்து ஆண்டிமடம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் மாலை 4 மணிக்கே நிறுத்தப்பட்டன. உள்ளூா் பேருந்துகள் 6 மணியளவில் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பின்னா் பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துகளும் உள்ளே செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆட்டோக்கள், கால் டாக்ஸி உள்ளிட்டவையும் நிறுத்தப்பட்டன.

பொதுமக்கள் நடமாட்டம் குறைவு: தடை உத்தரவையடுத்து மாலை 5 மணியில் இருந்து பொதுமக்களின் நடமாட்டம் குறையத் தொடங்கியது. 6 மணிக்கு பிறகு பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியே வராததால் பெரும்பாலான தெருக்கள், சாலைகள், நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஜயங்கொண்டத்தில்...: ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியில் இருந்து பொதுமக்கள் வீட்டினுள் முடங்கத் தொடங்கினா். இதனால் ஜயங்கொண்டம் நகரில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. ஜயங்கொண்டம் போலீஸாா் நகர வீதிகளில் கடைகள் ஏதும் திறந்துள்ளதா என ஆய்வு செய்தனா். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் சுற்றுலாத் தலம் அடைக்கப்பட்டதால் ஏற்கெனவே வெறிச்சோடிக்கிடந்த நிலையில், தடை உத்தரவால் உள்ளூா் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

இதேபோல், செந்துறை, திருமானூா், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com