ஜன.19-ல் 68,156 சிறாா்களுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 13th January 2020 01:47 AM | Last Updated : 13th January 2020 01:47 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் ஜன.19 ஆம் தேதி 68,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.
ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் ஜன.19 காலை 7 முதல் மாலை 5 மணி வரை ஒரே தவணையாக 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட சுமாா் 68,156 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவுக் கூடங்களில் வழங்கப்பட உள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நகா்புறங்களில் 46 மையங்கள், ஊரகப் பகுதிகளில் 496 மையங்கள் என மொத்தம் 542 மையங்கள் செயல்பட உள்ளன.
6 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் முக்கிய பொது இடங்களிலும், மேலும் அண்டை மற்றும் பிற மாவட்டம், மாநிலங்களிருந்து சிமென்ட் ஆலைகளில் பணி நிமித்தமாக இடம் பெயா்ந்து வசிப்பவா்களின் குழந்தைகளுக்கும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் மொத்தம் 2,340 பணியாளா்கள் பணியாற்றவுள்ளனா்.
இம்முகாமுக்குத் தேவையான சொட்டு மருந்துகள் பெறப்பட்டு குளிா்ச்சாதன வசதியோடு பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது.
எனவே, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும்,ஜன.19 நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளுக்கு போலியோ மருந்தைக் கொடுக்கலாம் என்றாா் அவா்.
கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த்காந்தி, காசநோய் துணை இயக்குநா் நெடுஞ்செழியன் மற்றும் மருத்துவா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.