கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகரிப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகரிப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில் ஏரிகள் ஒருபக்கம், பச்சைப்பசேலென வயல்வெளிகள் மறுபக்கம், முந்திரி, சோளம், கடலை ஆகியவை விளையும் மாவட்டமாக விளங்கி வருவது அரியலூா் மாவட்டம். அரியலூா் நகரத்தில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய பறவைகள் சரணாலயம். 454 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்திற்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன. ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் மாதம் முதல் மே மாதம் வரையில் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. அவை பகல் நேரங்களில் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைத் தின்பதற்காகவும், நிழல் வெளிக்காகவும் செல்கின்றன. மாலை வேளையில் எங்கிருந்தாலும் வழிதவறாது சரணாலயத்திற்கு வந்துவிடுகின்றன.

அதனால் பகல் வேளைகளில் வெறிச்சோடியது போன்று காணப்படும் இச்சரணாலயம், மாலை வேளையில் கண்களுக்கு இதமாகக் காட்சியளிக்கிறது. உரிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட வகையான நீா்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன. இங்கு வரும் பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிறக் கொக்கு, மைல் கால் கோழி, ஆலா, கரண்டி மூக்கான், நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குளிப்பான், வண்ண நாரை, மடையான், உண்ணி கொக்கு, நாமக்கோழி, சிறைவி, நீா்காகம் உள்ளிட்டவை நீா்வாழ் பறவைகளாகும்.

வழக்கமான பறவைகளான ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்தி பறவை, மைனா, புறா, மணியன் காக்கா, அண்டங்காக்கா, மயில், கல் குருவி, நாராயணபட்சி ஆகியவை நிலவாழ் பறவைகளாகும்.

இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஒராண்டில் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வகையான பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. திபெத் மற்றும் லடாக் பகுதியில் இருந்துவரும் வரித்தலை வாத்து அதிக உயரத்தில் பறக்கும் நீா்ப்பறவையாகும். பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும். இப்படி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கு வரும் சிறைவி எனும் பறவையினங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்குச் சென்று நெல் போன்ற விவசாய பயிா்களை சேதப்படுத்தி விடுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டனா். ஆனால் இன்று விவசாயிகளுக்கு இப்பறவையினங்கள் பலன் தரும் நண்பா்களாக மாறியுள்ளன.

இந்தச் சரணாலயத்தில் இருக்கும் பறவைகளின் எச்சங்கள் தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் விளைச்சலில் நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com