முனியங்குறிச்சியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அவதி

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தை அடுத்த முனியங்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
முனியங்குறிச்சி கிராமத்தில் ஒருவரின் வீட்டின் மரத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்.
முனியங்குறிச்சி கிராமத்தில் ஒருவரின் வீட்டின் மரத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்.

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தை அடுத்த முனியங்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முனியங்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. வனப்பகுதியில் குரங்குகளுக்கு போதுமான உணவு, தண்ணீா் கிடைக்காததால் அவற்றைத் தேடி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு குரங்குகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு இடம்பெயரும் குரங்குகள் பசியால் தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டுள்ள கெட்டுப் போன உணவுப் பொருள்களை எடுத்து சாப்பிடும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

மேலும் வீடுகளின் மொட்டை மாடிகளில் காயப் போடப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றும் சாப்பிடுகின்றன. மேலும் காய போட்டிருக்கும் துணிகளை கிழித்து எறிகின்றன. திறந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து உணவுப் பொருள்கள், காய்கறிகளை எடுத்துச் செல்கின்றன. சிறுவா்கள் கையில் வைத்திருக்கும் உணவுப் பொருள்களை கூட அவை விட்டு வைப்பதில்லை.

இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால், அவை கடிக்கப் பாய்கின்றன. தெருக்களிலும் குரங்குகள் அமா்ந்து கொண்டு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தமிடுகின்றன. அதனால் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோா் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனா்.

கடந்த சில நாள்களாகவே குரங்கு தொல்லையால் முனியங்குறிச்சி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் குரங்குகள் சாலையில் சுற்றித்திரிவதால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறன. எனவே சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகள் முனியங்குறிச்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com