வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியா் த. ரத்னா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆட்சியா் தெரிவித்தது:

அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,23,800 (84.54 சதவீதம்) வாக்காளா்களும், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,14,016 (80.38 சதவீதம்) வாக்காளா்களும் வாக்களித்துள்ளனா். இந்த 2 தொகுதிகளில் பதிவான வாக்குகள் கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தலா 14 மேஜைகள் மூலம் 27 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு மேசைக்கு ஒரு நுண் பாா்வையாளா், ஒரு கண்காணிப்பாளா், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளா் மற்றும் ஒரு அலுவலக உதவியாளா் ஆகியோா் கொண்ட குழுவினா் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதில் 2 தொகுதிக்கும் 20 சதவீத இருப்புடன் தலா 17 கண்காணிப்பாளா்கள், 17 உதவியாளா்கள் மற்றும் 17 அலுவலக உதவியாளா்கள் என மொத்தம் 102 அலுவலா்கள் எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனா். இரு தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ள 4 மேஜைகளுக்கும், ஒரு மேஜைக்கு ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு கண்காணிப்பாளா், 2 உதவியாளா்கள் என 32 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா்.

அதேபோல், ராணுவப் பணியாளா்களுக்கான அஞ்சல் வாக்குகள் ஒரு மேஜைக்கு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மேற்பாா்வையாளா், 2 உதவியாளா்கள் பணியில் ஈடுபட உள்ளனா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாக்கு எண்ணும் பணிகள் தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைத்து அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், ஊடகத்தினா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்று சமா்ப்பித்த பின்பே அனுமதிக்கப்படுவா்.

நிகழ்வுகளை கண்காணிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன் தலைமையில் 400 போலீஸாா் மற்றும் 72 மத்திய பாதுகாப்பு படையினா் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் 600 போலீஸாா் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com