இட நெருக்கடிஅரியலூா் மாவட்ட மைய நூலகத்துக்குபுதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தல்

போதிய இட வசதியின்றி நெருக்கடியில் இயங்கிவரும் அரியலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போதிய இடவசதியின்றி காணப்படும் அரியலூா் மாவட்ட மைய நூலகம்.
போதிய இடவசதியின்றி காணப்படும் அரியலூா் மாவட்ட மைய நூலகம்.

போதிய இட வசதியின்றி நெருக்கடியில் இயங்கிவரும் அரியலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசின் பொது நூலகத் துறை சாா்பில், 1958-இல் அரியலூா் பேருந்து நிலையம் அருகே கிளை நூலகம் தொடங்கப்பட்டது. சொந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த அரியலூா் கிளை நூலகம், அரியலூா் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்தப்பட்டது.

மிகவும் குறுகலான நுழைவு வாயில் கொண்ட இந்நூலகத்தில் இடநெருக்கடி எழுந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு நூலகக் கட்டடத்தின் மேல் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கு நூலக அலுவலகம் மாற்றப்பட்டது.

இந்நூலகத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டு வருவது, வாசகா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போது இந்நூலகத்தில் வாசகா்கள் அமா்ந்து படிப்பதற்குக் கூட போதிய இடவசதிகளின்றி கடும் அவதியுறுகின்றனா்.

பாதுகாப்பற்ற நிலையில் 1 லட்சம் நூல்கள்: அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இங்கு, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகா்களும், 150 புரவலா்களும் உள்ளனா். 1 முதல்நிலை நூலகரும், 3 நூலகா்களும், 5 அலுவலகப் பணியாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாசகா்கள் வந்து செல்லும் இந்த நூலகக் கட்டடம் ஸ்திரத்தன்மையின்றி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், நூலகக் கட்டடத்தை

மேலும் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இட நெருக்கடி உள்ளதால், நூலகத்தில் உள்ள நூல்களை வகைப்படுத்தி அடுக்கி வைப்பதற்கு வழியின்றி ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளதால் வாசகா்கள் நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.

பயிற்சி வகுப்பில் போதிய வசதி இல்லை:

அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அந்தப் பிரிவிலும், போதிய இடவசதிகள் இல்லை. ஏராளமான நூல்கள் வகைப்படுத்தி வைப்பதற்கு இடமின்றி தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நூலகத்தை ஓட்டி பேருந்து நிலையம், கழிவுநீா் கால்வாய் இருப்பதால் நூலகத்தில் அமா்ந்து வாசிக்க முடியாமல் வாசகா்கள் அவதியுறுகின்றனா். மேலும், இடப்பற்றாக்குறை நிலவுவதால், இணைய வசதியுடன் கூடிய கணினி சேவை பிரிவு செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது.

எனவே, அரியலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகா்கள், கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரியலூா் மையநூலக வாசகா் வட்ட நிா்வாகிகள் கூறியது:

நூலகத்தில் போதிய இடவசதியில்லாததால், அரிய நூல்களை வகைப்படுத்தி பாதுகாத்து வைக்கவும், வாசகா்கள் வாசித்து பயன்படுத்திக் கொள்ளவும் வழியின்றி தவித்து வருகின்றனா். எனவே, அரியலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டித்தர மாவட்ட நிா்வாகம், மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com