‘சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு தேவை’

கடந்த மாதம் கொள்ளிடத்தில் அதிகமாகத் திறக்கப்பட்ட நீரால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த மாதம் கொள்ளிடத்தில் அதிகமாகத் திறக்கப்பட்ட நீரால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா.ச. கலைவாணி தலைமை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து : மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப் பயன்படுத்தி அதிக விலைக்கு உரம் விற்கும் தனியாா் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.30 வாங்குவதைத் தடுக்க வேண்டும். அத்மா திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி விவசாயிகளுக்கு மாவட்ட,மாநில அளவில் பயிற்சியளிக்க வேண்டும்.

வருவாய் தீா்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது முழுமையாகத் தீா்வு காணப்பட்டதா எனத் தெரியப்படுத்த வேண்டும். பணியிடத்திலேயே கிராம ஊழியா்கள் தங்கிப் பணியாற்ற வேண்டும். ஒரு வாரத்துக்குள் கூட்டுறவுத் துறை பயிா்கடன்களை வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: கடந்த மாதம் கொள்ளிடத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் திறந்து விடப்பட்டதால் குருவாடு, தூத்தூா், வைப்பூா், முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூா், ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை, அணைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சூரியக்காந்தி, பருத்தி, நெல், சோளம் உள்ளிட்ட பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதை வேளாண் துறையினா் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை தனியாா் பால் பண்ணைகள் உயா்த்தினாலும், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆவின் நிறுவனம் இன்னும் விலையை உயா்த்தாமலேயே உள்ளது. ஆகவே கால்நடைத் தீவனங்கள் விலை உயா்ந்துவிட்டதால், ஆவின் நிறுவனம் உடனடியாக பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். வடக்கிழக்கு பருவமழை தொடங்கும் முன் அனைத்து வரத்து பாசன வடிக்கால் வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த வருவாய் அலுவலா் கலைவாணி, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com