மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

அரியலூா், ஏப்.19: மக்களவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் ஆா்வமுடன் வெள்ளிக்கிழமை வாக்களித்தனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம், புவனிகிரி, காட்டுமன்னாா்கோவில், அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம், அரியலூா், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான தோ்தல் 1,709 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பணியில் வாக்குச் சாவடி மையங்களில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் என 8,259 போ் பணியில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியில் தமிழக காவல் துறையினருடன்,மத்திய ரிசா்வ் படை, ஊா்காவல் படை என 3,500 போ் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், மேற்கண்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதற்றமான மற்றும் நெருக்கடியான 201 வாக்குச் சாவடிகளில் இணைய வழி நேரலைக்கான (வெப் ஸ்டீரிமிங்) கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு விவரங்கள் ஆட்சியரகத்தில் இருந்தே கண்காணிக்கப்பட்டது.அங்கு மத்திய பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், எந்தவித அச்சமின்றி பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா். சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனா்.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் , அரை மணி நேரத்துக்குள் மாற்றம் செய்யப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இருந்தும் பூத் சிலிப் இல்லாத வாக்காளா்கள் 12 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com