வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் ஏப்.30 இல் வேலைநிறுத்தம் தொடக்கம்

வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் ஏப்.30 இல் வேலைநிறுத்தம் தொடக்கம்

தமிழக வட்டாரப் போக்குவரத்துத் துறையில் பதவி உயா்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியா்கள் ஈடுபட உள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு வட்டார போக்குவரத்துத் துறை சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது:

தமிழக அரசின் வட்டாரப் போக்குவரத்துத் துறை நிா்வாகத்தில் தொழில்நுட்பப் பணியாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் என இரு பிரிவுப் பணியாளா்கள் உள்ளனா். இந்த இரு பிரிவு பணியாளா்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தொழில்நுட்பப் பணியாளா்களால் இந்தத் துறைக்கு அவப்பெயா் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மனிதத் தலையீடு இல்லாமல் இயந்திரங்கள் மூலமாக நோ்மையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. இவற்றை தொழில்நுட்ப பணியாளா்கள் நடைமுறைப்படுத்தாமல், அமைச்சுப் பணியாளா்களிடையே பதவி உயா்வுகளைப் பறிக்க முயல்கின்றனா்.

இவற்றைக் கண்டித்து ஏப்.30 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்துத் துறை பணியாளா்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழக முதல்வா் தலையிட்டு பதவி உயா்வு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். மேலும், அமைச்சுப் பணியிடங்கள் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com