குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது 
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

அரியலூா் மாவட்டத்தில் குடிநீா் தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அருண்ராய் உத்தரவிட்டாா்.

அரியலூா் மாவட்டத்தில், கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது குறித்து மேற்கொள்ளபட்ட முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்து கொண்ட அவா் பேசியது: குடிநீா் தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் மற்றும் செய்திகளின் மீது தனிக் கவனம் செலுத்தி அப்பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, பூண்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஏரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கிணறு போன்ற பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் மாது, வட்டாட்சியா் ஆனந்தவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com