புகழூரில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

புகழூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புகழூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்டம், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று நிலைய அலுவலர் திருமுருகன் பேசியது:  மண்ணெண்ணெய் அடுப்பு எரியும்போது மண்ணெண்ணெய் நிரப்பக் கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது, சமையல் அறையில் எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான், நைலக்ஸ் போன்ற சேலைகளை அணிந்து கொண்டு எரியும் அடுப்பு அருகில் செல்லக்கூடாது. 
சமையில் அறையில் பொருட்களை எடுக்கையில் எரியும் அடுப்புக்கு மேல் சாய்ந்து எடுக்கக்கூடாது. சமையல் அறையில் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் உபரி கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை வைக்கக் கூடாது. சமையல் எரிவாயு கசிவு இல்லை என்பதை உறுதி செய்தபின்புதான் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.
சிலிண்டர் வால்வு தீப்பற்றினால் சணல் சாக்கை அல்லது போர்வையை நீரில் நனைத்து அதன்மீது வெளிக்காற்று புகாதவாறு போட்டு மூடவேண்டும். குழந்தைகளை சமையல் அறையில் தனியாக விட்டுவிட்டு செல்லக்கூடாது. 
மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் நிலையில் இருக்கக்கூடாது. 
மின்சார தீவிபத்து ஏற்பட்டால் உடனே மின் இணைப்பை துண்டிக்கவேண்டும். வீடு அலுவலகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்விக்கூடங்களில் பழைய காகிதம், துணிமணிகள், மரச்சாமான்களை தேவையில்லாமல் சேமித்து வைக்கக்கூடாது. 
தூங்குவதற்கு முன் அகல் விளக்கையும், அடுப்பையும் அணைத்துவிடவேண்டும். 
தீ விபத்தில் புகை சூழ்ந்த இடங்களில் மூக்கில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு கீழே தரையில் தவழ்ந்து சென்று தப்பிக்கவேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக்கொண்டால் ஓடக்கூடாது. கம்பளி, பெட்ஷீட் போன்றவற்றை போர்த்தி தரையில் உருளவேண்டும். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த தண்ணீரை தலைப்பகுதியை தவிர மற்ற பகுதிகளில் ஊற்ற வேண்டும். பீடி, சிகரெட், சுருட்டு துண்டுகளை புகைத்த பின் அணைக்காமல் வீசக்கூடாது. 
செல்லிடப்பேசி சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போது பேசக்கூடாது. வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும்பொழுது பெட்ரோல் பங்க்கில் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது. 
இடி, மின்னல் ஏற்படும்பொழுது மொட்டை மாடியில் நின்று செல்போன் பேசக்கூடாது. இதுபோன்ற விழிப்புணர்வை கையாண்டால் தீ விபத்துக்களை தவிர்க்கலாம் என்றார்.  
முன்னதாக தீயணைப்பு வீரர்கள் தீவிபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைப்பது, தீவிபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது போன்ற செயல்விளக்கங்களை செய்து காண்பித்தனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com