"தனி மனிதச் சுதந்திரத்தை பறிக்கிறது மோடி அரசு'

தனி மனிதச் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் மோடி அரசின் செயல்பாடு உள்ளது என்றார் அகில இந்திய காங்கிரஸ்

தனி மனிதச் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் மோடி அரசின் செயல்பாடு உள்ளது என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் சஞ்சய்தத்.  கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்து விட்டதாக மோடி கூறுவது பொய்.  
இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளதற்கு காரணம் மோடிதான்.  காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதை மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் சமாளித்து பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டனர்.  ஆனால் அவர்கள் மீது பாஜக அரசு ஆதாரமில்லா குற்றச்சாட்டை முன் வைக்கிறது. 
நாடு மிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. பண மதிப்பிழப்பு, கருப்பு பண மீட்பால்  நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்றார் மோடி.  அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. 
தமிழகத்தில் ஊழல் அதிர்ச்சியளிக்கும் நிலையில் உள்ளது. வெளிப்படையான ஆட்சியைக் கொடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இன்னும் லோக்பாலை நிறைவேற்றவில்லை. ஊழல் செய்யும் அமைச்சர்கள்  மீது அரசு எந்த  நடவடிக்கையையும் எடுப்பதில்லை.
ஆனால் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் ஊழல் செய்வோர் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து, அவரைப் பதவியில் இருந்து நீக்குவோம் என்றார் அவர். 
காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலர் அருள்பெத்தையா, மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினர்கள் பேங்க் கே. சுப்ரமணியன், ஆர். ஸ்டீபன்பாபு, மாவட்டத் தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com