கல்வியில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது

காலணி முதல் மடிக்கணினிகள் வரை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாமல் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன் மூலமாக தமிழகம்


காலணி முதல் மடிக்கணினிகள் வரை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாமல் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன் மூலமாக தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏற்பாட்டின்பேரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.  இந்த முகாமில் பங்கேற்று,  தேர்வு செய்யப்பட்ட 4,663 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, அமைச்சர் மேலும் பேசியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறைக்கு தனிக்கவனம் செலுத்தியதால் தேசிய அளவில் உயர்கல்வி பயில்வோர் சதவீதம் 25 சதவிகிதமாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் 46.9 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகிறார்கள்.
காலணி முதல் மடிக்கணினி வரை விலையில்லாமல் வழங்கியதால் இன்று தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முகாம் மூலம் வேலை பெற்றவர்கள் இது வாழ்வின் 
முதற்படிக்கட்டு என நினையுங்கள். இதில் கிடைக்கும் அனுபவங்கள் மூலம் அடுத்த நிறுவனத்திற்கு செல்லும்போது அதிக ஊதியம்,  திறமையானவர் என்ற பெயர் கிடைக்கும். இந்த வேலைவாய்ப்பை வாழ்வின் அடித்தளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். 
முகாமில்,  டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், மென்பொருள் நிறுவனங்கள், அசோக் லைலேண்ட், ஏசியன் பேப்ரிக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான நபர்களை கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தன.
முன்னதாக இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தொடக்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்றவர்களில் 4,463 பேர்  தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது. விழாவுக்கு, குமாரசாமி பொறியியல் கல்லூரிச் செயலர் கு. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  
செயல் இயக்குநர் குப்புசாமி முன்னிலை வகித்தார். தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
 கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், ஒன்றியச் செயலர்  கமலக்கண்ணன், கல்லூரி முதல்வர் என்.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com