வாக்குச்சாவடிகளுக்கு பொருள்களை அனுப்பும் பணி

வாக்குச்சாவடிகளு க்கு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 96 வகையான பொருள்களை அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. 

வாக்குச்சாவடிகளு க்கு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 96 வகையான பொருள்களை அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குத் தேவையான சுமார் 96 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுவதையும், அப் பொருட்கள் வாக்குச்சாவடிகளை சென்றடைந்ததா என்பது குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பொருட்கள் வட்டாட்சியரகத்திலிருந்தும், கரூர் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பொருட்கள் கரூர் வட்டாட்சியரகத்திலிருந்தும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அனுப்பிவைக்கப்படுவதை ஆய்வு செய்தார்.
அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்து அனுப்புமாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கூறிய அவர் தொடர்ந்து புலியூரில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்த பின்னர் கூறியது:
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,031 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 4,181 பேர் பணிபுரிய உள்ளார்கள். இதுதவிர கூடுதலாக 835 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 5,016 பேருக்கு பணி  ஒதுக்கீடு செய்வதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 
பணி ஆணை பெற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், காவலர்கள்  என அனைவரும் புதன் இரவுக்குள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவிடுவார்கள். இது மண்டல அலுவலர்கள் மூலம் உறுதிசெய்யப்படும். 
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்டம் முழுவதும், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 29 காவல் ஆய்வாளர்கள், 125 துணை ஆய்வாளர்கள், 668 காவலர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் இந்திய துணை ராணுவப் படையினர் உள்பட மொத்தம் 1,751பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 3,439 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 1,552 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,775 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் என சுமார் 96 வகையான பொருட்களும்  வாக்குச்சாவடி மையங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 
வாக்குப்பதிவு நாளான 18-ஆம் தேதி காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.  
வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி வாக்காளிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள இதர 11 வகையான புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களைக்காட்டி வாக்களிக்கலாம் என்றார்.
முன்னதாக காலையில் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மற்றும் சேரன் பள்ளிகளில் முறையே கிருஷணராயபுரம் மற்றும் கரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படுவதை பார்வையிட்டு, தேர்தலை நேர்மையாகவும், சிறப்பாகவும் நடத்த ஆலோசனை வழங்கினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கு. சரவணமூர்த்தி (கரூர்), மல்லிகா (கிருஷ்ணராயபுரம்), துணைக் காவல் கண்காணிப்பாளர் மா. கும்பராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com