கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை
By DIN | Published On : 21st April 2019 04:03 AM | Last Updated : 21st April 2019 04:03 AM | அ+அ அ- |

கரூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றார் காங்கிராஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி.
கரூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் போதிய பாதுகாப்பு இல்லை என வந்த தகவலையடுத்து, சனிக்கிழமை இந்த மையத்தைப் பார்வையிட்ட ஜோதிமணி மேலும் கூறியது: வழக்கமாக வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்று கட்ட, ஐந்து கட்ட பாதுகாப்பு இருக்கும். ஆனால் இங்கு விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் காவலர்கள் உள்ளனர். யாராவது இங்கு வந்து முறைகேட்டில் ஈடுபடும் வகையில் பாதுகாப்பு உள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எழுதியிருக்கிறோம், உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என நம்புகிறோம். ஏதோ உள்நோக்கத்துடன் பாதுகாப்பைக் குறைத்திருப்பதாகத் தெரிகிறது. மொத்தமே 6 பேர் மட்டுமே காவலர்கள் இருக்கிறார்கள், அவர்களது கையில் துப்பாக்கி கூட கிடையாது.
கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கூறியிருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.