கோயம்பள்ளி - மேலப்பாளையம் பகுதியில் அமராவதி உயர்மட்டப் பாலம் திறக்கப்படுமா?

போக்குவரத்து வசதிக்காக,  ரூ.10 கோடியில் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் திறப்பு விழா காணாமல்

போக்குவரத்து வசதிக்காக,  ரூ.10 கோடியில் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் திறப்பு விழா காணாமல் பயனற்று கிடக்கும் கோயம்பள்ளி-மேலப்பாளையம் அமராவதி உயர்மட்டப்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா? என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 கரூர் அடுத்த கோயம்பள்ளி, சோமூர், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம்,  அரங்கநாதன்பேட்டை, திருமுக்கூடலூர் உள்ளிட்ட கிராமங்கள் கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமராவதி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளன. 
இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கோ, புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை போன்ற கரூர் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கோ செல்ல வேண்டுமெனில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்துதான் பேருந்திலோ அல்லது ரயில்களிலோ செல்ல முடியும்.  மேலும் அமராவதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் ஆற்றின் மறுகரையில் உள்ள மேலப்பாளையம், புலியூர், வீரராக்கியம் ஆர்எஸ், மாயனூர் போன்ற பகுதிகளுக்கும் செல்ல கரூர் பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். 
இதனால் பயண நேரம் அதிகமாகுவதுடன், பயணச் செலவும் அதிகமாகி வருவதால் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே உயர்மட்டப்பாலம் கட்ட வேண்டும் என கோயம்பள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும், மேலப்பாளையம், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதையடுத்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி மேற்கொண்ட முயற்சியால் கடந்த 2008-இல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கரூர் மாவட்டத்தின் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பாலம் கட்டுவதற்கு ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. நபார்டு திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டு 2011-இல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 
இதற்கிடையே, பாலத்திற்கான அணுகுசாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. பின்னர் திடீரென பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. பாலம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் பாலத்தை விரைவில் போக்குவரத்து வசதிக்கு திறக்க வேண்டும் என கோயம்பள்ளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுதொடர்பாக கோயம்பள்ளியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ""அரசியல் காரணங்களுக்காக இன்னும் இந்த பாலத்தை திறக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். எந்த நோக்கத்திற்காக, மக்களின் நலனுக்காக இந்த பாலம் கட்டப்பட்டதோ, இப்போது அந்த நோக்கம் நிறைவேறாமல் மக்களின் வரிப்பணம் ரூ.10 கோடி வீணாகி வருகிறது.  
பாலம் திறக்கப்படாததால் தற்போது இந்த பாலத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  மேலும் பாலத்தின் முகப்பு பகுதிகளையும், திட்ட மதிப்பீடு வைக்கப்பட்ட பலகைகளையும் சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். 
விரைந்து அரசியல் பாகுபாடின்றி உடனே பாலத்தை திறக்க தமிழக அரசு முன்வரவேண்டும்'' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com