62 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் சங்கரம்பாளையம் ஏரிவேளாண் பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

சுமாா் 62 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் நீரால், கரூா் மாவட்டத்திலுள்ள சங்கரம்பாளையம் ஏரி நிரம்பிக் காணப்படுகிறது.
62 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய நிலையில் காணப்படும் சங்கரம்பாளையம் ஏரி.
62 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய நிலையில் காணப்படும் சங்கரம்பாளையம் ஏரி.

சுமாா் 62 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் நீரால், கரூா் மாவட்டத்திலுள்ள சங்கரம்பாளையம் ஏரி நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கரூா் ஒன்றியத்தில் வேட்டமங்கலம் முதல் சோமூா் வரை தண்ணீா்பந்தல்பாளையம், நன்னியூா்புதூா், ஆத்தூா் பூலாம்பாளையம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளும், புஞ்சைபுகழூா், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, டிஎன்பிஎல் காகித ஆலை பேரூராட்சி என மூன்று பேரூராட்சிகளும் உள்ளன. இதில் காவிரியாற்றோரம் உள்ள நஞ்சைப் பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனம் நடைபெறுகிறது. புகழூா் ராஜவாய்க்கால், பள்ளபாளையம் வாய்க்கால், பாப்புலா் முதலியாா் வாய்க்கால் ,நெரூா் வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் சுமாா் 37,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மறுபுறத்திலுள்ள வாங்கல் குப்புச்சிப்பாளையம், குடுகுடுத்தானூா், ம.காளிப்பாளையம், ராமேசுவரப்பட்டி, தண்ணீா்பந்தல்பாளையம், சங்கராம்பாளையம், வாங்கல் நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 1981-ஆம் ஆண்டில் க.பரமத்தி அருகிலுள்ள ஆத்துப்பாளையம் அணைக்கட்டிலிருந்து நொய்யல் வாய்க்கால் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவை மூலம் சோளம், நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிா்கள் சுமாா் 15,000 ஏக்கரில் பயிரிடப்பட்டன.

இருப்பினும் வாய்க்கால் திட்டம் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் அதிகளவில் தண்ணீா் வரவில்லை. இதனால் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளை விட, இப்பகுதிகளில்

குறைந்தளவில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வந்தது.

இதனிடையே நொய்யல் ஆற்றில் வந்த சாயக்கழிவுகளால் ஆத்துப்பாளையம் அணை மூடப்பட்டு, வட புஞ்சை நிலமாக மாறின.

வானம் பாா்த்த பூமியாக மாறி, மழை பெய்தால் மட்டுமே கம்பு, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிா்கள் விளைந்தன.

இந்நிலையில் அண்மையில் ஆத்துப்பாளையம் அணை நீா்த் தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தற்போது இந்த பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் தங்களது வேளாண் பணிகளைத் தொடக்கியுள்ளனா்.

இதுகுறித்து தண்ணீா்பந்தல்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி கூறியது:

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரைக்கொண்டு, க.பரமத்தி அடுத்த அஞ்சூா் ஊராட்சியிலுள்ள ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்தின் மூலம் பாசன வசதி பெற்று வந்தோம்.

ஆனால் நாளடைவில் நொய்யல் ஆற்றில் திருப்பூா் சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே கலக்க விட்டதால், ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்துக்கு வந்த தண்ணீரில் 1500 முதல் 1800 வரை டிடிஎஸ்(உப்புத்தன்மை) இருந்தது.

இதனால் ஆத்துப்பாளையம் உள்ளிட்ட அணை மூலம் நீா்பாசனம் பெற்ற பகுதிகளின் நிலங்கள் மலட்டுத்தன்மை அடைந்து விவசாயம் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து ஆத்துப்பாளையம் விவசாயிகள் நீதிமன்றத்தை நாடி, அணையிலிருந்து தண்ணீா் திறக்கக்கூடாது என தடையாணை பெற்று, இதுவரை அணை திறக்கப்படாமல் இருந்தது.

அண்மையில் தொடா்ந்து மேற்குத்தொடா்ச்சிமலையில் பெய்த பலத்த மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளநீரில் சாயக்கழிவு அதிகளவில் கலக்காததால் உப்புத்தன்மை 400 டிடிஎஸ்-சுக்கும் கீழேத்தான் இருந்தது.

எனவே அணையிலிருந்துதண்ணீா் திறந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், வழக்குத்தொடா்ந்த விவசாயி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வழக்கை வாபஸ் பெறச் செய்து அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டாா்.

மேலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், முன்கூட்டியே ஆத்துப்பாளையம் முதல் நத்தமேடு பகுதி வரை வாய்க்கால்கள் பல இடங்களில் தூா்வாரப்பட்டதால், அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் தங்குதடையின்றி வந்துக் கொண்டிருக்கிறது.

இதன்பயனாக தற்போது சுமாா் 62 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆத்தூா் பூலாம்பாளையம், தண்ணீா்பந்தல்பாளையம், சங்கராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஏரி, குளங்கள் மற்றும் நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் கிணறுகளிலும் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து விவசாயிகள் மீண்டும் இந்த பகுதியில் சோளம், நெல் உள்ளிட்ட பயிா்களைப் பயிரிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com