பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரை மாற்ற வேண்டும்

குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் திணிக்க பார்க்கும்  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலரை உடனடியாக

குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் திணிக்க பார்க்கும்  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம்.
கரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கட்டடத்தின் அடித்தளம் போன்றது தொடக்கக் கல்வி. 30,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளையும், கல்வி வளர்ச்சி அடையும் வகையிலும் உருவாக்கப்பட்டது இத்துறை.
ஆனால், தற்போதைய கல்வித்துறை முதன்மைச் செயலர் தொடக்கக் கல்வித்துறைக்கே  மூடு விழா நடத்தி, பள்ளிக் கல்வித்துறையோடு இணைத்திட முயன்று வருகிறார். கடந்த 2  ஆண்டுகளில் 2000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், நிகழாண்டில் 1,324 பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.  மேலும், வரும் ஆண்டுகளில் 9000 பள்ளிகளும், 12,000 சத்துணவு மையங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளன.
 இது மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராசர், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் ஒப்பற்ற செயலுக்கு எதிரானதாகும்.  ஏழைக்குழந்தைகளை பட்டினிப்போட்டு 12,000 தொடக்கப்பள்ளிகளையும், அப்பள்ளிகளுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைத்தால் அத்தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் குழந்தைகள் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று பயில இயலாத நிலை உருவாகும். அவர்கள் அனைவரும் இடையில் நிற்றல் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள்.  மீண்டும் அக்குழந்தைகள் தனது பெற்றோர் செய்யும் தொழிலையே செய்யச் சென்றுவிடுவார்கள். இது மறைமுகமாக குலக்கல்வித்திட்டத்தை மீண்டும் திணிப்பதாகும். 
 அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகை குறைய அரசுதான் காரணம். தனியார் பள்ளிகளை போன்று அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு இல்லை. வகுப்புக்கு ஒரு ஆசிரியரோ, பாடப்பிரிவுக்கு ஒரு ஆசிரியரோ இல்லை. காலிப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்றார் மீனாட்சிசுந்தரம். 
பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com