தாய்நாட்டை நேசிப்பவர்களின் முதல் கடமை ஊழலை வேரறுப்பதுதான்

தாய்நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை ஊழலை வேரறுப்பதாக


தாய்நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை ஊழலை வேரறுப்பதாக இருக்க வேண்டும் என்றார் சென்னை அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம்.
நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்ற சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் உ. சகாயம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:
சென்னை போன்ற பெரு நகரங்கள், வாழ்வதற்கு ஏற்றதல்ல. பிழைப்பதற்கும், வாழ்வதற்கும், கிராப்புறங்களே ஏற்றவை. இந்தியா, கிராமங்களால் வாழ்கிறது. விவசாயிகள் நெருக்கடியில் இருக்கின்றனர். சமூகத்தை நேசிக்கின்ற விவசாயிகளுக்கு, இன்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: அறிவியல் நகரம் சென்னையில் மட்டுமே உள்ளது. பிற இடங்களில் இல்லை. கிராமியக் கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 1 லட்சம் விருது வழங்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கிராமப்புற விஞ்ஞானிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் விருது வழங்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் திட்டத்தை அரசுக்கு அளிக்க இருக்கிறோம்.
ஊழலை எதிர்ப்பது என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இந்தக் கடமை கூடுதலாக இருக்கிறது.
பிரச்னை என்னவென்றால் ஊழல் அதிகம் இருப்பதால் அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் சரி இல்லாதவர்கள்போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது.
உள்ளபடியே இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத் திட்டத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த தாய்நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை, ஊழலை வேரறுப்பதாக இருக்க வேண்டும்.வருங்காலத்தில் ஊழலுக்கு எதிராக ஒத்த கருத்துடைய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com