கர்நாடக அரசை கலைக்க பாஜக முயற்சி  : கரூர் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு

கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்க  பாஜக முயற்சி என்றார் காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி.


கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்க  பாஜக முயற்சி என்றார் காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி.
கர்நாடகாவில் பாஜக அரசு செய்யும் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக கரூரில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:  
கருப்புப் பணத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பாஜக இன்று கருப்புப் பணத்தை பயன்படுத்தி, கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜனநாயகப் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. இதனை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நிச்சயம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்த ஜனநாயகப் படுகொலைக்கெல்லாம் காங்கிரஸ் பயந்துவிடாது. மகாராஷ்டிரம், குஜராத், பிகார் போன்ற மாநிலங்களில் ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்குகளை அவர் சந்தித்து வருகிறார். கர்நாடகாவை பொறுத்தவரை காவிரி ஆணையத்தை அமல்படுத்த வேண்டிய பாஜக அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு காவிரி நதி நீரில் மட்டுமின்றி, நிதி ஒதுக்கீட்டிலும் வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும்  திருப்பி அனுப்பி வஞ்சித்துள்ளது. இதனை தமிழக அரசு மக்களுக்கு தெரியாமல் மறைத்துள்ளதை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் 37 மக்களவை உறுப்பினர்களும் மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். 
எங்களுக்கு ஹிந்தியில் அனுப்பிய தகவலைப் பெற மறுத்ததால் ஆங்கிலத்தில் அனுப்பத் தொடங்கியுள்ளனர். 
புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தொடர்ந்து ஹிந்தியைத் திணிக்கும் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com