சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் மக்கள் நீதி மய்யம்


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். 
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின்போது மநீம வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மே 12-ஆம் தேதி இரவு பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் நடைபெற்ற பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் மட்டுமின்றி  பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
இதனிடையே பள்ளப்பட்டியைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2-இல் 15 நாள்களுக்குள் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து சனிக்கிழமை திருச்சி வந்த கமல்ஹாசன் பிற்பகலில் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2-இல் நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில்,  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்வதில், மக்கள் நீதி மய்யம் முனைப்பாக இருக்கும்.   மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மக்கள் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
ஹிந்தியை திணிக்கக் கூடாது
முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. விருப்பம் உள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானலும் கற்றுக் கொள்வார்கள். 
முக்கியமாக தமிழர்கள் தங்களது தாய்மொழியாம் தமிழைத் தவிர்த்து இன்னொரு மொழியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
எனவே, தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் மாயமானதாக ஒட்டுமொத்தமாக கூற முடியாது. பிழைகள் நேர்ந்திருக்கலாம். அவற்றை தேர்தல் ஆணையத்துக்கு சுட்டிக் காட்டி தீர்வு காண்பது நமது ஜனநாயக கடமை என்றார்அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com