2-ஆவது நாளாக செவிலியர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் 4 பேர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம்

போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் 4 பேர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் 140-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு செவிலியர் பணி அல்லாத வேலைகளை மருத்துவமனை முதல்வர் தருவதாகக் கூறி கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மாள் தலைமையில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு அரசு பணியாளர் நன்னடத்தை விதிமுறை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அரசு நர்சுகள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மாள், மாவட்டத் தலைவர் கார்த்திக், செயலர் செல்வராணி,பொருளாளர் தனலட்சுமி ஆகியோரை செவ்வாய்க்கிழமையும், மருந்தாளுநர் சுப்ரமணியை புதன்கிழமையும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஸிவெண்ணிலா  பணியிடை நீக்கம் செய்தார்.
இதைக் கண்டித்தும்,  பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும் செவ்வாய்க்கிழமை காலை முதல் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் புதன்கிழமையும்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலர் ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாததால் புதன்கிழமை இரவும் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள் கூறுகையில், நர்சுகளுக்கு சம்பந்தமில்லாத பணி எங்களுக்கு வழங்கக் கூடாது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட வேண்டும்.  எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.  இப்போது எங்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம், சிஐடியு,  ஜாக்டோ-ஜியோ அமைப்புகள், சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் இறங்கியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com