புகழூர் சமணர் படுகை சேதம்; தொன்மை ஆதாரத்துக்கு ஆபத்து

காதலர்களின், சமூக விரோதிகளின் கூடாரமாக புகழூர் சமணர் படுகையில் மாறியுள்ள நிலையில், அதில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு எழுத்துகள் அழிக்கப்பட்டு,  கரூரின் தொன்மை ஆதாரத்துக்கு  ஆபத்து


காதலர்களின், சமூக விரோதிகளின் கூடாரமாக புகழூர் சமணர் படுகையில் மாறியுள்ள நிலையில், அதில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு எழுத்துகள் அழிக்கப்பட்டு,  கரூரின் தொன்மை ஆதாரத்துக்கு  ஆபத்து ஏற்பட்டுள்ளதாக  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்டபோது, சேரர்களின் தலைநகரமாக வஞ்சிமாநகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய கருவூர் என்னும் கரூர் இருந்துள்ளது. 
இதற்குச் சான்றாக ஆம்பிராவதி என்னும் தற்போதைய அமராவதி நதியில் கிடைத்துள்ள சங்க காலப் பொற்காசுகள், செம்புக்காசுகள் சேரன் செல்லி இரும்பொறை கரூரை ஆண்டதற்கான சான்றாக உள்ளன. 
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் சமயப்புரட்சி ஏற்பட்டபோது, இந்தியாவில் சமண சமயம் மேலோங்கியது.  சமணத்தின் 24-ஆவது  தீர்த்தங்கரர்தான் (சமய போதகர்) மகாவீரர். இவரது காலத்தில்தான் நாடெங்கும் சமண சமயம் வேகமாகப் பரவியது. 
கரூரை ஆண்ட சேரன் செல்லி இரும்பொறை, தென்னிந்தியாவில் கூன்பாண்டியன், முதலாம் மகேந்திரவர்மன் ஆகியோர் சமணத்தை ஆதரித்தது வரலாற்றில் தெளிவாக உள்ளது.
கரூரை தலைநகரமாகக் கொண்டு கி.பி.1-ஆம் நூற்றாண்டில் சேரன் செல்லி இரும்பொறை ஆண்டபோது அவனது மகன் கடுங்கோன் வஞ்சி மாநகர பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டபோது, சேரன் மகனை ஆசிர்வதிக்க, வடமாநிலத்தில் இருந்து மூத்தா அமணன் என்ற சமணர் தலைமையில் 5 துறவிகள் கரூர் வந்தடைந்தனர். மகாவீரரைப் போல திகம்பரர்(ஆடைகளைத் துறந்தவர்) என்ற  நிலையில் இருந்த இவர்கள் கரூரில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் புகழிமலையில் உள்ள குகையில் தங்கினர். 
 6 பேர் படுத்து உயிலும் வகையில் அந்தக் குகையில் துறவிகளால் உருவாக்கப்பட்ட கற்படுகை இன்றும் உள்ளது. இந்தப் படுகையின் அடிப்பகுதியில் பண்டைய பிராகிருத மொழியில் கல்வெட்டும் உள்ளது. 
அந்தக் கல்வெட்டில் ஆற்றூரின் (தற்போது ஆத்தூர்) கொங்கு நாட்டு வள்ளலும், பொன் வணிகனுமான செங்காயன் என்பவர் கற்படுகையை அமைத்துக் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. 
இவ்வாறு சங்க காலச் சேரமன்னன் கரூரை ஆண்டதற்கான சாட்சியாக, பொக்கிஷமாகக் கருதப்படும் இந்த சமணர் படுகை தற்போது காதலர்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.  அங்குள்ள பிராகிருத மொழி கல்வெட்டு எழுத்துகளின் மேல் ஆணி உள்ளிட்டவற்றைக் கொண்டு இதயம் போன்றவற்றை வரைந்து, பெயர்களையும் எழுதுகின்றனர்.  கருவூரின் தொன்மை அடையாளம் அழிய அவர்கள் காரணமாக இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலரும், கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனருமான மேலை. பழனிய்யப்பன் கூறுகையில், ஒரு நாட்டின் தொன்மை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்ள ஏதுவாக இருப்பது கல்வெட்டுகள்.
 கரூரை சங்க கால சேரமன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்குச் சான்றாக இருப்பவை இந்தக் குகைகள் மற்றும் அங்குள்ள கல்வெட்டுகள், அமராவதியில் கிடைத்த காசுகள், செப்பேடுகளும்தான்.
இவற்றில் கரூர் புகழிமலையில் உள்ள சேரர் கால கல்வெட்டுகளை அழிப்பது இன்றைய இளைய தலைமுறையினரின் அறியாமை  என்றாலும், நாட்டின் தொன்மையைக் காக்க உருவாக்கப்பட்ட தொல்லியல் துறையின் அக்கறையின்மையும் ஒரு காரணம்.
கரூரை முற்காலச் சேரர் பின்னர், பிற்கால சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டாலும், சங்க காலத்தின் முற்காலச் சேரர்கள் கரூரை தலைநகரமாக ஆண்டதற்கு ஒரே ஒரு ஆதாரம் இந்த சமணர் படுகைகள்தான். கரூர் மாவட்டத்தில் சுக்காலியூர், புகழிமலை, நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், சென்னக்கல்புதூர், பரமத்திவேலூர் அருகே உள்ள அர்த்தநாரிபாளையம் ஆகிய இடங்களில் சமணர்கள் வாழ்ந்த குகைகள், கற்படுகைகள் இருந்தாலும், இப்போதும் உயிர்ப்புடன் இருப்பது கரூர் புகழிமலை சமணர் படுகைதான். இங்குதான் கல்வெட்டில் தெள்ளத்தெளிவாக கொங்கு நாட்டின் பொன் வணிகன் செங்காயன் குறித்து கூறப்பட்டுள்ளது. 
இந்த சமணர் படுகை போதிய பாதுகாப்பின்றி தற்போது காதலர்கள், சமூக விரோதிகள் ஓய்வெடுக்கும் அறையாகவும், அவர்களது சின்னமான இதயம், அம்புகளை கல்வெட்டில் பொறிக்கும் இடமாகவும் மாறிவிட்டது. 
இந்த அவலத்தைப் போக்கவும், பாரம்பரியத்தின் நினைவுச் சின்னமான புகழிமலை சமணர் படுகையை போற்றிப் பாதுகாக்கவும் குகைக்கு யாரும் செல்லாதவாறு இரும்பு வேலி அமைப்பதோடு, காவலாளியையும் நியமிக்க வேண்டியது அரசின் கடமை. 
இல்லையேல் தற்போது இருக்கும் நினைவுச்சின்னமும் காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனவே  தொல்லியல் துறை இதைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com