பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்யவே ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியர்

பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காகவே ஜமாபந்தி நடப்பதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார். 


கரூர்:  பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காகவே ஜமாபந்தி நடப்பதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார். 
மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 1428-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தியின் தொடக்க நாளில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர் மேலும் பேசியது:  
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் மற்றும் புகழுர் ஆகிய வட்டங்களை சேர்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை முதல் 21- ஆம் தேதி வரையும் மற்றும் 25 ஆம் தேதியும் நடைபெறுகிறது. 
வருடத்திற்கு ஒருமுறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காகவே இந்த ஜமாபந்தி நடத்தப்படுகிறது. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளனவா என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.  
எனவே பொதுமக்கள் வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்றார். 
மேலும், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் மாற்றுத்திறனாளிக்கு தாங்குகட்டை, 2 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் 2 பேருக்கு சூரியமின்சக்தி விளக்குப்பொறி விளக்குகள் 
ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 
கரூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிகளில் மண்மங்கலம் வட்டத்தில் 91 மனுக்களும், கடவூர் வட்டத்தில் 202 மனுக்களும், கரூர் வட்டத்தில் 112 மனுக்களும், புகழூர் வட்டத்தில் 26 மனுக்களும், அரவக்குறச்சி வட்டத்தில் 19 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 113 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 145 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. ஜமாபந்தி முடியும் நாளில் குடிகள் மாநாடு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் துறை இணை இயக்குநர் ஜெயந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, நில அளவை பிரிவு உதவி இயக்குநர் பழனிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) முருகானந்தம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மேலாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோட்டாட்சியர் தலைமையில்... 
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய  ஜமாபந்தியை கரூர் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி தொடக்கி வைத்தார். கரூர் வட்டாட்சியர் சக்திவேல், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
ஜமாபந்தியின் முதல் நாளில் கரூர், லட்சுமிநாராயணசமுத்திரம், பாலாம்பாள்புரம் ஆகிய 3 குறு வட்டங்களின் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டாமாற்றம், குடும்ப அட்டை வேண்டி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 110 மனுக்கள் பெறப்பட்டன. 
தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 19)  சணப்பிரட்டி, மேலப்பாளையம், புலியூர், உப்பிடமங்கலம்(கீழ்பாகம்), உப்பிடமங்கலம் மேல்பாகம் , மணவாடி ஆகிய குறுவட்டங்களுக்கு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் அன்பழகன், மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வருவாய் ஆய்வாளர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com