மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு

மின் வாரியத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த இரு பெண்கள் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


கரூர்: மின் வாரியத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த இரு பெண்கள் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுசிலா. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அவரது தோழிகள் சண்முகப்பிரியா, கிருஷ்ணவேணி ஆகியோர், தனக்குத் தெரிந்த நண்பர் மூலம் உனக்கு தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாங்கித் தருகிறோம் எனக்கூறியுள்ளனர். 
இதையடுத்து, சண்முகப் பிரியாவும், கிருஷ்ணவேணியும், கரூர் நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு டிச.1-ஆம்தேதி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, சௌந்தரராஜன் ரூ.7.10 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கித்தருவதாகக் கூறியுள்ளார். 
இதையடுத்து 2018 ஜன. 24-ஆம் தேதி ரூ. 7.10 லட்சத்தை சுசிலா மேற்குறிப்பிட்ட சண்முகப் பிரியா, கிருஷ்ணவேணி மற்றும் சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் மூவரும் கூறியவாறு வேலை வாங்கிக்கொடுக்கவில்லை. இதனால் சுசிலா கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். 
இதையடுத்து கொஞ்சம், கொஞ்சமாக ரூ.6.10 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இதனிடையே மீதமுள்ள ரூ.1லட்சத்தை கேட்டபோது, கொடுக்க முடியாது என மூவரும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுசிலா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்சவேணி, வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட சண்முகப்பிரியா, கிருஷ்ணவேணி, சௌந்தரராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com