வெற்றிலையில் இலைச்சுருட்டல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

வெற்றிலையைத் தாக்கி வரும் இலைச்சுருட்டல் நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வெற்றிலையைத் தாக்கி வரும் இலைச்சுருட்டல் நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் புகழூர், வேலாயுதம்பாளையம், நெரூர், நொய்யல், சேமங்கி, புஞ்சைத்தோட்டக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் வெற்றிலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், மோகனூர்,  சேலம், திருச்சி போன்ற இடங்களில் செயல்படும் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. புகழூர் வட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி குஜராத், மும்பை மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
 கரூர் மாவட்டத்தில் வெள்ளை பச்சைக்கொடி, கற்பூரம் ஆகிய இருவகைகளான வெற்றிலைகள் சாகுபடி செய்யப்பட்டாலும், பெரும்பாலும் வெள்ளை பச்சைக்கொடிதான் அதிகளவில் சாகுபடியாகிறது. வெற்றிலையில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் இலைச்சுருட்டல் நோய் தாக்கி வருவதாகவும், இதனால் வெற்றிலை உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறி வருகிறார்கள்.
இதுதொடர்பாக புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளர் க.ராமசாமி கூறியது: வெற்றிலைக்கு தண்ணீர் கிடைக்காமல் கடந்த இரு ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வந்தோம். பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறையை கடைப்பிடித்தனர். இந்நிலையில், தற்போது ஒருவாரமாகவே புகழூர் வாய்க்காலில் தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயிகள் சந்தோஷப்பட்டாலும், வெற்றிலையில் இலைச்சுருட்டு நோய் தாக்கி வருவது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 
இந்நோய் பெரும்பாலும் சில நேரங்களில் வரும் பின்னர் போய்விடும். ஆனால் கடந்த 5 மாதங்களாக இந்த நோயின் தாக்கம் தீவிரமாகியுள்ளது. இப்போது வெற்றிலைக்கு நல்ல மவுசும் உள்ளது. அதாவது நல்ல விலை கிடைக்கிறது. 
இருப்பினும் நோயின் தாக்குதலால் போதிய மகசூல் இல்லை. கடந்த ஒரு வாரமாகவே 104 கவுளி கொண்ட ஒரு சுமை குறைந்த பட்சம் சுமாரான வெற்றிலைக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையும், நல்ல தரமான வெற்றிலைக்கு ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையும் விலை கிடைக்கிறது. ஆனால் இலைச்சுருட்டு நோய் தாக்கிய வெற்றிலையை விற்கவும் முடியாது. 
இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து ஏக்கருக்கு ரூ.5,000 வரை செலவழித்து அடிக்கிறோம். இருப்பினும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் சனிக்கிழமை எங்களது விவசாயிகளை சந்திப்பதாக கூறியுள்ளார்கள். அவர்கள் வந்து நல்ல ஆலோசனை வழங்கி, இந்த இலைச்சுருட்டல் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com