2,096 பேருக்கு ரூ.44.35 கோடியில் பட்டாக்கள்

கரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வருவாய்த் துறை சார்பில் 2,096 பயனாளிகளுக்கு ரூ.44.35கோடி மதிப்பிலான

கரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வருவாய்த் துறை சார்பில் 2,096 பயனாளிகளுக்கு ரூ.44.35கோடி மதிப்பிலான பட்டாக்களும், 29,658 பேருக்கு மாதாந்திர ஓய்வூதிய ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 
கரூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.46 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கரூர் நகராட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.5.77 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய பணிகளுக்கு பூமிபூஜையிட்டு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் மேலும் பேசியது:  
கரூர் நகரில் நீண்ட காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்த நிலையை மாற்றி பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருமாநிலையூர், செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 பேருக்கு ரூ.25 கோடி மதிப்பில் பட்டாக்களும்,  தொடர்ந்து நெரூர் ஒத்தக்கடையில் 216 பேருக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது. 
இன்று வழங்கப்படும் பட்டாக்களையும் சேர்த்து கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் கரூர் மாவட்டத்தில் 2,096 பயனாளிகளுக்கு ரூ,44.35 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ஆதரவற்ற முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 29,658 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
"அதிமுக கூட்டணியைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பயம்'-  பூமிபூஜையின் போது, அமைச்சர் மேலும்  கூறியதாவது: 
எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் தேமுதிக வரும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் கூட்டணியைப் பார்த்து எதிர்க்கட்சியினருக்கு பயம் வந்துவிட்டது. 2011-இல் திமுக 1 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டது எனக்கூறி அதிமுகவினர் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். 
ஜெயலலிதா அவரது வழியில் அண்மையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழகம் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் நிலையில், நிதிச்சுமை, கடன் அளவு வரம்புக்குள் இருப்பதால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை.   ரூ.2,000 வழங்குவது தேர்தலுக்காக என்பது பொய் என்றார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) மீனாட்சி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, வட்டாட்சியர்கள் ரவிக்குமார், செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com