காரில் கடத்திவந்த 282 மதுபாட்டில்கள் பறிமுதல்: நாமக்கல் பெண் கைது
By DIN | Published On : 04th March 2019 08:32 AM | Last Updated : 04th March 2019 08:32 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இருந்து கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் கடத்தி வரப்பட்ட 282 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
மது கடத்தல் குறித்து தகவலறிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான போலீஸார் கரூர் வெங்கமேடு அருகே ஆத்தூர் பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காருக்குள் இருந்த பெண் மட்டும் சிக்கினார். காரை போலீஸார் பரிசோதித்தபோது அதில் புதுச்சேரி மாநிலத்தின் 282 மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் மனைவி கஸ்தூரி(32) என்பவரைக் கைது செய்த போலீஸார், தப்பி ஓடிய கார் ஓட்டுநர் புவனேந்திரனைத் தேடி வருகின்றனர்.