திமுகவை ஆதரித்து கொமதேக ஈஸ்வரன் பிரசாரம்
By DIN | Published On : 15th May 2019 08:27 AM | Last Updated : 15th May 2019 08:27 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேலாயுதம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வாக்குகள் சேகரித்து பேசினார்.
பிரசாரத்தின்போது அவர் மேலும் பேசியது: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது திமுக. இலவச மின்சாரம் அதிகளவில் தேவைப்பட்டது கொங்கு விவசாயிகளுக்குத்தான். ஏனெனில் இங்கு மட்டும்தான் 1,500 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்கிறோம். விவசாயிகளின் கடன் ரூ. 7, 200 கோடியை தள்ளுபடிசெய்ததும் கருணாநிதி தான். உழவர் சந்தையைக் கொண்டு வந்ததும் திமுகதான்.
திமுகவும், அமமுகவும் கூட்டணி சேர்ந்துவிட்டதாக முதல்வர் பேசியுள்ளார்; செந்தில்பாலாஜியை துரோகி என எடப்பாடி பேசியுள்ளார். துரோகத்தைப் பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குடும்பத்திற்கு 5 வருடத்திற்கு ரூ. 3.60 லட்சம் அளிக்கப்படும், சிலிண்டர் விலை ரூ.400, கேபிள் டிவி கட்டணம் ரூ.100 என குறைப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக்கடன், கல்விக்கடனும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வாக்காளர்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
அதிமுகவில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்குத்தான் போட்டி. இன்றைக்கு தமிழகத்தின் கடன் ரூ.6 லட்சம் கோடி, தமிழகத்தை மதிக்காத, தமிழக விவசாயிகளை மதிக்காத பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை புறக்கணிக்க வேண்டாமா? என்றார்.
பிரசாரத்தின்போது கொமதேக மாநில துணைபொதுச் செயலாளர் நடராஜ், வர்த்தக அணிச் செயலாளர் விசா ம.சண்முகம், மாவட்டச் செயலாளர் மூர்த்தி மற்றும் திமுகவினர், கொமதேகவினர் பங்கேற்றனர்.