அதிமுக வேட்பாளரால் மட்டுமே  தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
       அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து புதன்கிழமை ஈசநத்தம் மூன்றுரோடு, புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின்ரோடு, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் வாக்குசேகரித்து அவர் மேலும் பேசியது: 
ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் தான் தொகுதிக்கும் மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய, பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய வாய்ப்பு உருவாகும். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் எந்த மாற்றமும்  ஏற்படப் போவதில்லை. அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் காவிரிக் கூட்டுக்குடிநீர்,  அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.120 கோடியில் தார்ச் சாலை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. திமுக ஆட்சியில் 18 மணிநேர மின் வெட்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழகம் முழுவதும் மின் வெட்டே இல்லை. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். 
22 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ஆட்சி தொடரும். பெண்களுக்கு ஆதரவாக, பாதுகாப்பாக இந்த ஆட்சி இருக்கிறது. அம்மா கூட இருந்துகொண்டே துரோகம் செய்து வெளியே சென்று கட்சி ஆரம்பித்துள்ள டிடிவி தினகரன் செய்தது தான் துரோகம்.  உண்மையான சிலிப்பர் செல் மிஸ்டர் டிடிவி தினகரன் மட்டுமே. அவர் காணும் எந்த பகல் கனவும் நிறைவேறப்போவதில்லை. ஸ்டாலின் நிலையைக்கண்டு தமிழகமே சிரிக்கிறது. துரைமுருகனை தேமுதிகவினர் இருவர் சந்தித்தபோது, ஒரு கூட்டணியில் பேசிவிட்டு, இன்னொரு கூட்டணியோடு பேசுவது நியாயமா என்றார்கள். ராகுல் காந்தி பிரதமர் எனக்கூறிவிட்டு, மூன்றாவது அணி உருவாக தூதுவிட்டுக்கொண்டிருக்கிறீர்களே இதைவிட கேவலம் எதுவும் இல்லை என்றார்.பிரசாரத்தின்போது அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேட்பாளர் செந்தில்நாதன் உள்பட கூட்டணிகட்சி நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com