அதிமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் திமுகவுக்கு  இடம் கொடுக்கக் கூடாது

ஆட்சியில் இருந்து அதிமுகவை அகற்ற நினைக்கும் திமுகவுக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி.

ஆட்சியில் இருந்து அதிமுகவை அகற்ற நினைக்கும் திமுகவுக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி.
 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி. செந்தில்நாதனை ஆதரித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி புகழூர் ஹைஸ்கூல் மேடு, விஸ்வநாதபுரி, சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு வாக்குச் சேகரித்து பேசினார். 
அப்போது அவர் பேசுகையில், ""கடந்த முறை இதே தொகுதியில் வெற்றி பெற்றவர் திசைமாறிச் சென்றதால்தான் இந்தத் தேர்தல் வந்திருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கான திட்டங்களை வழங்கி ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். 
பொங்கல் பண்டிகையன்று அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் அனைவருக்கும் ரூ.1000 கொடுத்தார். ஆனால் அதை திமுகவினர் வழக்குப்போட்டு தடுக்க முயன்றனர். இருப்பினும் அந்தத் தொகை அனைவருக்கும் கிடைத்தது. இதேபோல வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.2,000 கொடுக்க அரசு முன்வந்தபோதும் திமுக தடுத்தது. இப்போது தேர்தல் என்பதால் அந்தத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. தேர்தலுக்குப்பின் நிச்சயம் அந்தத் தொகையும் கிடைக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என திமுக கங்கனம் கட்டுகிறது. ஆனால் அதற்கு நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது.
பள்ளர் உள்ளிட்ட ஆறு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என மாற்றம் செய்ய நாம் போராடி வருகிறோம். அந்தக் கோரிக்கையும் விரைவில் நிறைவேறப்போகிறது. நம் முன்னோர் காலத்தில் இருந்து 100 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். தேர்தல் முடிந்ததும் அந்தக் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித்தருவார் என்றார். 
பிரசாரத்தின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com