வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்லிடப்பேசி, லேப்டாப், ஐ-பேடுக்கு அனுமதியில்லை : அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லிடப்பேசி, லேப்டாப், ஐ-பேட் உள்பட எந்தவொரு  மின்னணு சாதனத்தையும்

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லிடப்பேசி, லேப்டாப், ஐ-பேட் உள்பட எந்தவொரு  மின்னணு சாதனத்தையும் எடுத்துவரக் கூடாது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த.அன்பழகன். 
கரூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான தளவாய்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பினை அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், வாக்கு எண்ணும் நாளான 23-ஆம் தேதியன்று, வாக்கு எண்ணும் மையத்திற்கு காலை 5 மணிக்கு முன்னதாகவே வருகைதர வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எந்தெந்த மேசையில் பணியாற்ற உள்ளார்கள் என்பது குறித்து 23-ம் தேதி காலை 5 மணிக்கு கனிணி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு தெரியவரும். 23-ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும். 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்போது செல்லிடப்பேசி, லேப்டாப், ஐ-பேட் உள்பட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் எடுத்து வரக்கூடாது. சதாராண கால்குலேட்டர் மட்டும் தேவைப்பட்டால் எடுத்து வரலாம். 
மேலும், அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை அணிந்து வரவேண்டும்.
வாக்கு எண்ணும் பணிக்காக ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேசைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேசைக்கும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் என மூன்று நபர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வாக்குகளும் குறிக்கப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கை விவரம் மேற்பார்வையாளரால் கையொப்பம் இடப்பட்டு, அப்போது இருக்கும் அனைத்து முகவர்களிடமும் கையொப்பம் பெறவேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அறையைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்றார் அவர்.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இதில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட அலுவலர்களுக்கும், பிற்பகலில் மணப்பாறை, விராலிமலை மற்றும் வேடச்சந்தூர் தொகுதிகளுக்குள்பட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இக்கூட்டத்த்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வசுரபி (பொது), ரவிச்சந்திரன் (தேர்தல்), உதவி தேர்தல் அலுவலர்கள் கு.சரவணமூர்த்தி (கரூர்), மீனாட்சி (அரவக்குறிச்சி), மல்லிகா(கிருஷ்ணராயபுரம்), காமராஜ் (மணப்பாறை), ராமு (வேடச்சந்தூர்), சிவதாஸ்(விராலிமலை), உதவி ஆட்சியர்கள் கணேஷ்,  லீலாவதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com