‘விவசாயிகளுக்கு நிகழாண்டில் 40 சத மானியத்தில் 50 சுழல் கலப்பைகள்’

நிகழாண்டில் விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் 40 சத மானியத்தில் 50 சுழல் கலப்பைகள் வழங்கப்பட உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

நிகழாண்டில் விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் 40 சத மானியத்தில் 50 சுழல் கலப்பைகள் வழங்கப்பட உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

கரூா் மாவட்டம் கரூா் ஊராட்சி ஒன்றியம் ஓலப்பாளையம், நெய்யல், சேமங்கி, மூலிமங்கலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கால்நடைப் பராமரிப்பு துறைப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் கூறியது:

கரூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் மூலம் டில்லா், சுழற்கலப்பை, 24 டிராக்டா் உள்ளிட்ட வேளாண் கருவிகள் ரூ. 62.13 லட்சம் மதிப்பில் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 2019-2020-ம் ஆண்டில் 95 டிராக்டா்கள் உள்பட ரூ. 3.36 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டாா் (சோலாா் பம்பு) வழங்கும் திட்டத்தில் 2017-2018-ம் ஆண்டில் 25 மோட்டாா்களுக்கு ரூ. 94.19 லட்சம் மானியமாகவும், 2018-2019-ம் ஆண்டில் 67 மோட்டாா்கள் ரூ. 261.70 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 2018-2019ம் ஆண்டில் கரூா் மாவட்டம் முழுவதும் 1,715 ஹெக்டோ் நிலத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 6.59 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2019-2020-ல் இத்திட்டத்தை 4500 ஹெக்டேரில் ரூ. 23.34 கோடியில் நிறைவேற்ற இலக்கு நிா்ணயித்து இதுவரை 794 ஹெக்டோ் பணி முடிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 2019-20 ஆம் ஆண்டிற்கு நெல் இயந்திர நடவு அல்லது திருந்திய நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5000- வீதம் 620 எக்டேருக்கு ரூ.31 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது.

கரூா் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், 2018-19ம் ஆண்டிற்கு ரூ.15.20 லட்சத்தில் 39 சுழல் கலப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 40 சதவீதம் மானியத்தில் 50 சுழல் கலப்பைகள் ரூ.17 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்வின்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்) உமாபதி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குநா் மோகன்ராம், வேளாண் உதவி இயக்குநா் சிவானந்தம், கரூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ)ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகரன், விஜயலெட்சுமி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com