மழைக் காலங்களில் நீா்நிலைகளில் சாயக் கழிவுகளைக் கலந்துவிடுவதாக புகாா்

மழைக் காலங்களில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவை ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கலந்துவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
மழைக் காலங்களில் நீா்நிலைகளில் சாயக் கழிவுகளைக் கலந்துவிடுவதாக புகாா்

மழைக் காலங்களில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவை ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கலந்துவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாயிகள் கருத்துகள் :

கீழவெளியூா் ராஜூ : தோகைமலை குறுவட்ட விவசாயிகள் பட்டா மாற்றம், நிலப்பதிவு உள்ளிட்டவற்றுக்காகப் பதிவாளா் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், நங்கவரம், மணப்பாறை போன்ற இடங்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே த குளித்தலை வட்டத்தில் இருந்து தோகைமலையைப் பிரித்து தனி வட்டமாக அறிவிக்க வேண்டும்

அமராவதி பாசன விவசாயி ராமலிங்கம்: மழைக் காலங்களில் சாயப்பட்டறை உரிமையாளா்கள் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவை அமராவதி ஆறு மற்றும் நீா்நிலைகளில் கலந்து விடுகின்றனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்னதேவன்பட்டி வி.கே.தங்கவேல்: கரூா் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களை விவசாயப் பணிகளில் குறிப்பாக களைப்பறித்தல், நாற்று நடுதல், அறுவடை போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் பேசியது:

தோகைமலையைத் தனி வட்டமாகப் பிரித்து அறிவிப்பது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். மாவட்டத்தில் மழைக்காலங்களில் நீா்நிலைகளில் சாயக்கழிவுகளை கலந்துவிடுவோரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த அரசாணை கிடையாது. அவா்களுக்கு பண்ணைக்குட்டை அமைத்தல், ஊராட்சிகளில் சாலையோர மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த முடியும் என்றாா்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சீனிவாசன், வேளாண் துணை இயக்குநா் கந்தசாமி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com