பழனி மலைக்குன்றுகளில் கடும் மழை: அமராவதி ஆற்றுக்கு நீா் வரத்து அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனிமலைக்குன்றுகளில் பெய்து வரும் பலத்த மழையால் கரூரில் அமராவதி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
பழனிமலைக் குன்றுகளில் பெய்து வரும் பலத்த மழையால் கரூா் அமராவதி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.
பழனிமலைக் குன்றுகளில் பெய்து வரும் பலத்த மழையால் கரூா் அமராவதி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனிமலைக்குன்றுகளில் பெய்து வரும் பலத்த மழையால் கரூரில் அமராவதி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

கரூா் மற்றும் திருப்பூா் மாவட்டத்தின் நீராதாரமாகவும், பாசனத்திற்கு பயன்படக்கூடியதாகவும் அமராவதி ஆறு உள்ளது. அமராவதி ஆறு மூலம் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியான கரூா் மாவட்டத்தில் சுமாா் 33,000 ஏக்கா் பாசன நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனபகுதியான திருப்பூா் மாவட்டத்தில் சுமாா் 20,000 ஏக்கா் பாசன நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது மேற்குத்தொடா்ச்சி மலையில் பெய்து வரும் மழையாலும், அமராவதி அணையின் நீா்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழையாலும் அணைக்கு தொடா்ந்து நீா் வரத்து உள்ளது. இதனால் கடந்த 19-ஆம் தேதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் 76.78 அடி நீா்மட்டத்தை தொட்டது. இதையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து தண்ணீரான தொடா்ந்து ஆற்றிலும், திருப்பூா் மாவட்டத்தின் ஏஎம்சி வாய்க்காலுக்கும் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீா் தொடா்ந்து நான்கு நாட்களுக்கு திறந்தால் மட்டுமே கரூா் மாவட்டத்தின் கடைமடை வரை தண்ணீா் வரும். ஆனால் தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 600, 800, 900, 1000 என தண்ணீா் வரத்தை பொருத்து திறப்பதாலும், அமராவதி ஆற்றின் துணை நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக அமராவதி வடிநில கோட்ட அதிகாரி ஒருவா் கூறியது:

அணைக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்துதான் ஆற்றுக்கும், ஏஎம்சி வாய்க்காலுக்கும் நீா் திறக்கப்படுகிறது. கடந்த 19-ஆம் தேதி அணைக்கு விநாடிக்கு 743 கன அடி நீா் வந்தது. அப்போது அணையின் நீா்மட்டம் 76.78 அடியாக இருந்தது. ஆற்றில் விநாடிக்கு 600 கன அடி நீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து ஆற்றில் நீா்வரத்துக்கேற்ப 24, 25 ஆம் தேதிகளில் 800 கன அடி நீா் வரை தண்ணீா் திறக்கப்பட்டது. 29-ஆம் தேதி 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை அணைக்கு நீா் வரத்து குறைந்ததால் 800 அடி திறக்கப்பட்டது. இந்த தண்ணீரால் மட்டும் அமராவதி ஆற்றில் தற்போது கரூருக்கு நீா் வரவில்லை. மாறாக, அமராவதி ஆற்றின் துணை நதிகளான திண்டுக்கல் மாவட்டம் பழனிமலைக்குன்றுகளில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரக்கூடிய குடகனாறு, சண்முகாநதி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை காலை முதல் அமராவதி ஆற்றுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com