அமராவதி அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு: பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 5 மணி  நிலவரப்படி 80 அடியாக உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 5 மணி  நிலவரப்படி 80 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாசனத்துக்காக அணையைத் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் என இரு மாவட்டங்களிலும் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.  
இந்நிலையில் இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மூணாறு, மறையூர், காந்தலூர், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடிக்கும் மேலாக இருந்தது. இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 83 அடியை எட்டியது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. 
இதையடுத்து புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிர்களைக் காப்பாற்ற 15 நாள்களுக்கு உயிர் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் அமராவதி ஆற்றிலும் தினமும் 2 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 8 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பாம்பாறு, சின்னாறு, தேனாறு என நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 79 அடியை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 80 அடியைத் தாண்டியது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைப் பகுதியில் பொதுப் பணித் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 
அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என  பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறையினர் கூறியதாவது:
அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து  வருகிறது. இந்நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.
அணையில் நீர் இருப்பு நிலவரம்:
90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நீர்மட்டம் 80.06 அடியாக இருந்தது. அணைக்கு 1588 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3180  மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.  அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com