குளம் தூர்வாருவதில் அதிமுக-திமுக இடையே போட்டி: போலீஸ் குவிப்பு

நெடுங்கூர் குளத்தைத் தூர்வாருவதில் அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட போட்டியால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நெடுங்கூர் குளத்தைத் தூர்வாருவதில் அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட போட்டியால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர், தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட உப்பிடமங்கலம் உள்ளிட்ட குளங்கள் திமுக இளைஞரணி சார்பில் புதன்கிழமை தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவே நெடுங்கூர் குளத்தை தூர்வாரும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் தொடங்கினர்.  புதன்கிழமையும் பணி தொடர்ந்த நிலையில்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியராஜன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஏராளமான போலீஸார் நெடுங்கூர் குளக் கரையில் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே காலை 11 மணியளவில் திமுக மாவட்ட பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி, திமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, க. பரமத்தி ஒன்றியச் செயலர் கருணாநிதி மற்றும் திமுகவினர் நெடுங்கூர் குளத்தின் தென்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை தொடங்கினர்.
அப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கட்சியின் தலைவர் அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  கரூரில் செந்தில்பாலாஜி தலைமையில் மூன்று இடங்களில் தூர்வாருகிறோம்.
நாங்கள் தூர்வாரத் திட்டமிட்ட நெடுங்கூர் குளத்தை அதிமுகவினர் தூர்வாருவது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.  தேவைப்பட்டால் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் எங்கள் இளைஞரணியில் உறுப்பினராகச் சேர்ந்து இதுபோன்ற சமூகப் பணிகளில் ஈடுபடலாம் என்றார்.
இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடந்த குளம் தூர்வாரும் பணியை  ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கூறியது:
குடிமராமத்து திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் சிறிய, பெரிய 434 குளங்களை தூர்வாரும் பணிகளில் பாதிப்பணிகள் முடிந்துள்ளன.  40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்கள் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளன.
நெடுங்கூர் குளத்தை அரசு அனுமதியோடு தூர்வாருகிறோம். கட்சி தலைமையிடத்தில் பெயர் வாங்கும் எண்ணத்தோடு கரூரில் இருக்கும் ஒருவர் இந்த வேலையை செய்கிறார். கடவூர் மாவத்தூரில் காங்கிரஸார் 1.6 ஹெக்டேர் பரப்பு குளத்தை அனுமதி கேட்டு தூர்வாரினர். மக்களுக்குச் சேவை செய்வதை யாரும் தடுக்கப் போவதில்லை.  
திமுகவைச் சேர்ந்த நண்பர் மகேஷ் எனக்கு திமுக இளைஞரணியில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.  கட்சிகளுக்கு பதவிக்காக போகிறவர்களை அவர் சேர்க்கலாம். எங்களுக்கு ஒரே தலைமை ஜெயலலிதாதான். எடப்பாடி தலைமையில் உயிருள்ளவரை செயல்படுவோம். அரசு அனுமதியோடு அவர்கள் எந்த வேலையானாலும் செய்யட்டும் என்றார்.
பேட்டியின்போது அதிமுக நிர்வாகிகள் ஏ.ஆர். காளியப்பன், எஸ். திருவிகா, வை. நெடுஞ்செழியன், வி.வி. செந்தில்நாதன், தானேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com